Wednesday, February 23, 2011

நாட்காட்டியில் ஒரு புதிர் விளையாட்டு

குட்டீஸ்
காலண்டர் [நாட்காட்டி]வைத்து ஒரு சின்ன கணக்குப் புதிர் போட்டு உங்க நண்பர்களை அசத்துங்க‌


இப்படி ஒரு நாட்காட்டியை எடுத்துக் கொண்டு உங்க நண்பரிடம் ஒரு சதுர அமைப்பில் உள்ள ஏதேனும் நாலு எண்களை மனதில் நினைத்துக் கொள்ளச் சொல்லுங்க‌
படத்தில் உள்ளது போல நான்கு எண்களும் சதுர அமைப்பில் இருக்க வேண்டும்.பின்னர் அவர் மனதில் நினைத்துக் கொண்ட எண்களின் கூட்டுத் தொகையை மட்டும் உங்களிடம் சொல்லும்படி கேளுங்கள்.


அதிலிருந்து அவர் எந்த நாலு எண்களை மனதில் நினைத்தார் என்பதை நொடியில் சொல்லி விடலாம்.

உதாரணமாக படத்தில் உள்ள சதுரத்தின் கூட்டுத் தொகை=80 [16+17+23+24=80]
ஒரு சின்ன பார்முலா [சூத்திரம்] சதுரத்தின் முதல் எண்ணை n ஆக வைத்துக் கொண்டு அடுத்த‌து n+1 n+7 n+8 ஆக
                       n+n+1+n+7+n+8=(4n+16)  = 80
                                                           4n  = 80-16 =64
                                                                          n=64/4 =16

16 னு ஒரு எண் தெரிந்து விட்டால் 17,23,24 என சதுரத்தின் மற்ற எண்களைச் சொல்லி விடலாம்.


சின்ன அல்ஜிப்ரா கணக்குத்தான்.விளக்கம் தான் பெரிது.மனக் கணக்காப் போட்டா எளிதாகச் சொல்லி விடலாம்.

அதுசரி 16 கண்டுபிடிச்சா அது [16,17,23,24] ஆக இல்லாமல்
[16,17,9,10]      [16,15,8,9]        [16,15,22,23]
 
என எந்தச் சதுர அமைப்பு வேண்டுமானாலும் இருக்கலாமேன்னு சந்தேகம் வருதா? வரக்கூடாதே.....ஏன்னா கூட்டுத் தொகைக்கும் அது ஒத்து வர வேண்டும் சரிதானே...




எங்கே ஒரு நாட்காட்டியை எடுத்துக் கொண்டு உங்க மாய வித்தையைக் காட்டுங்க...இப்போ பரிட்சை நேரமில்லையா?எல்லாம் முடிந்து விடுமுறையில் விளையாடுங்க...:))



Friday, April 2, 2010

துன்பத்தை உதறித் தள்ளு...

ரு ஊரில் சலவைத் தொழிலாளி ஒருவர் இருந்தார்.அவரிடம் வயதான கழுதை ஒன்று இருந்தது. அதற்கு வயதாகிப் போனதால் பொதி சுமக்கச் சிரமப் பட்டது.நடக்கவும் சிரமப் பட்டது. ஒருநாள் தொழிலாளி தன் கழுதையுடன் சென்று கொண்டிருந்தபோது கழுதை வழியில் இருந்த பாழடைந்த கிணற்றுக்குள் விழுந்து விட்டது.



எப்படியாவது அந்தக் கழுதையைத் தொலைத்து விட நினைத்திருந்த தொழிலாளி இதுதான் சமயமென்று நினைத்தார்.கழுதையை மேலே தூக்கிவிடாமல் அப்படியே கிணற்றில் புதைத்து விடுவோம் என அருகில் இருந்தவர்களைக் கூப்பிட்டார்.
கழுதை அப்படியே புதைந்து போகட்டும் என்று எல்லோருமாகச் சேர்ந்து மண்வெட்டி கொண்டு வந்து அருகிலிருந்த மண்ணை வெட்டிக் கிணற்றுக்குள் தள்ளினர்.
ஆரம்பத்தில் தன் மீது விழும் மண்ணைக் கண்டு திகைத்த கழுதை பின்பு சுதாரித்துக் கொண்டது.
தனக்கு நேரும் துன்பத்தை எண்ணி வருந்திக் கொண்டிருந்தால் பயனில்ல்லை.ஏதாவது செய்து தப்பிக்க வேண்டும் என நினைத்தது.
தன் மீதும் விழும் மண்ணை உடம்பைச் சிலிர்த்து உதறியபடியே கொஞ்சம் கொஞ்சமாக அடி எடுத்து வைத்து வெளியே வர முயற்சித்தது.
மேலே இருந்தவர்களும் மண்ணை வெட்டிப் போட்டுக் கொண்டேயிருந்தனர்.தப்பிக்க வேண்டுமென்ற குறிக்கோளே பிரதானமாக இருந்ததால் கழுதையும் வேகமாக மண்ணை உதறி விட்டபடி மேலே ஏறி வந்து விட்டது.
தொழிலாளியும் கழுதையின் விடாமுயற்சியில் வியந்து மனமிறங்கி தன்னுடன் அழைத்துச் செல்ல முடிவு செய்தான்.
மனிதர்களாகிய நமக்கும் பல விதங்களில் சோதனைகளும் துன்பங்களும் வந்து சேரலாம்.அதையே நினைத்து உழன்று கொண்டிராமல் அதை எல்லாம் உதறித் தள்ளி விட்டு மீண்டு வர முயற்சி செய்வதே புத்திசாலித்தனம்.

வாழ்க்கையில் எதற்கு ஆசைப் படுகிறோம்
வாழ்க்கையின் குறிக்கோள் என்ன
எதிகாலக் கனவுகள் என்ன
என்பதை விட அதை நிறை வேற்ற
என்ன செய்ய வேண்டும்
எப்படித் திட்டமிட வேண்டும்
எப்படிச் செயல்பட வேண்டும் என்பதே முக்கியம்

Saturday, December 26, 2009

வாழ்க்கையின் பிரதிபலிப்பு

னைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
நம் வாழ்க்கையும் நம்மைச் சுற்றி உள்ளவர்களும் எப்படி இருக்க வேண்டும் என்பது நாம் எப்படியிருக்கிறோம் என்பதைப் பொறுத்ததே.
ஒரு ஊர்ல ஒரு அழகான கண்ணாடி மாளிகை இருந்தது.மாளிகையின் உள்ளே எந்தப் பக்கம் பார்த்தாலும் கண்ணாடிகளே பொருத்தப் பட்டிருந்தன.
ஒரு நாள் நாய்க் குட்டி ஒன்று உள்ளே சென்று பார்த்தது.மாளிகை முழுதும் கண்ணாடி என்பதால் பார்க்கும் இடமெல்லாம் நாய்க் குட்டிகளாகத் தெரியவும் இந்த குட்டி நாய்க்கு சந்தோஷம் வந்தது.தன் வாலை ஆட்டி மகிழ்ச்சியைத் தெரிவித்தது.கண்ணாடியில் தெரிந்த நாய்க்குட்டியின் பிம்பங்களும் அதே போல வாலை ஆட்டுவதாகத் தெரிந்தது.அட்டா எத்தனை அன்பானவர்கள் நம்மைச் சுற்றி இருக்கிறார்கள்னு நினைத்தபடியே சந்தோஷமாக வெளியே ஓடியது.



அதே ஊரில் இன்னொரு நாய்க் குட்டி இருந்தது.அது கொஞ்சம் முசுடு.யாரோடும் சேராமல் தனித்தே இருக்கும்.அந்த நாய்க்குட்டியும் கண்ணாடி மாளிகையின் உள்ளே சென்று பார்க்க விரும்பியது.கண்ணாடியில் தெரிந்த அதனுடை பிம்பங்களைப் பார்த்ததும் அதற்கு பயமும் வெறுப்பும் வந்ததால் தற்காப்புக்காக முறைத்தபடியே கோபமாகப் பார்த்தது.அதனுடைய பிம்பங்களும் அவ்வாறே திரும்ப முறைக்கவும் அடடா இத்தனை எதிரிகளா எனப் பயந்து வெளியே ஓடி விட்டது.

அன்பை விதைத்தால் அன்பையே அறுவடை செய்யலாம்.வெறுப்பு ,கோபம் இவற்றை விதைத்தால் திரும்பக் கிடைப்பதும் அதுவே.நாம் என்ன செய்கிறோமே அதுவே நமக்குத் திரும்பக் கிடைக்கும்.நம் எண்ணங்களும் செயல்களுமே நம் வாழ்க்கையின் பிரதிபலிப்பு.

Tuesday, December 15, 2009

குருட்டு விழியும் ஓவியமும்


ரு வசதியான பெரிய மனிதருக்கு தன்னை ஓவியமாக வரைந்து பார்க்க வேண்டும் என்று நெடுநாள் ஆசை.அவருக்கு இரண்டு கண்களில் ஒன்றில் பார்வை கிடையாது.பார்ப்பதற்கும் விகாரமாக இருக்கும்.அதனால் தன்னை யார் அழகாக வரைகிறார்களோ அவர்களுக்கு நிறைய சன்மானம் தருவதாகக் கூறினார்.ஆனால் அதே சமயம் ஓவியம் தனக்குப் பிடிக்கவில்லையென்றால் தண்டனையும்  கொடுக்கப்படும் என்றும் அறிவித்தார்.
பக்கத்து ஊரிலிருந்து மூன்று ஓவியர்கள் அவரின் நிபந்தனைக்கு ஒப்புக் கொண்டு அவரின் ஓவியத்தை வரையத் தொடங்கினர்.

முதலாமவனின் ஓவியத்தில் பெரிய மனிதரின் உருவத்தை அச்சு அசலாக வரைந்திருந்தான்.அந்த ஓவியத்தில் தன்னுடைய குருட்டு விழியைப் பார்த்ததும் தன்னைக் கேலி செய்வதாகக் கோபப்பட்ட பெரிய மனிதர் அவருக்கு 50 கசையடிகள் கொடுக்க உத்தரவிட்டார்.

இரண்டாவது ஓவியனும் அவரை அப்படியே தத்ரூபமாக வரைந்திருந்தான்.ஆனால் அவரின் இரு விழிகளையும் சீர்படுத்தி குருட்டுவிழி தெரியாதபடிஅழகாக வரைந்திருந்தான்.அதைப்பார்த்த பெரிய மனிதர் உண்மையை மறைத்து பொய்யாக தன்னைச் சித்தரித்திருப்பதைக் கண்டு கோபப்பட்டு அவனுக்கு 100 கசையடிகள் கொடுக்கச் சொன்னார்.

மூன்றாவது ஓவியன் அவரின் நேரான உருவத்தை வரையாமல் பக்கவாட்டுத் தோற்றத்தை[புரோஃபைல்] வரைந்திருந்தான்.அவரின் ஓவியம் அழகாக இருந்ததோடு குருட்டு விழியும் பக்கவாட்டில் மறைத்து வரையப்பட்டதால் மனம் மகிழ்ந்த அவர் அவனுக்கு நிறைய சன்மானங்களை வழங்கினார்.

பெரிய மனிதரிடம் குறை இருந்தாலும் அதை சுட்டிக்காட்டாமலும்,பொய்யாக அதை மறைக்காமலும் ,அவரின் நிறையை மட்டுமே கண்டு கொண்டதால் மூன்றாமவனுக்கு பரிசு கிடைத்தது.

Saturday, December 12, 2009

பெட்டி நிறைய முத்தங்கள்

 கிறுஸ்துமஸ்  நெருங்கிக்கொண்டிருந்தது.
பண்டிகைக்குசெலவு செய்யப் பணம்இல்லையென்று அப்பா கவலைப்பட்டுக் கொண்டிருந்தார்.
அம்மா வீட்டில் இருந்த பொருட்களைக் கொண்டு கிறுஸ்துமஸ் மரம் அலங்கரித்தாள்.
வீட்டிலிருந்த சின்னப் பெண் தங்க நிற சரிகைத் தாளைக் கொண்டு ஒரு அட்டைப் பெட்டியை அலங்கரித்து கிறுஸ்துமஸ் மரத்தின் அடியில் வைத்தாள்.

பார்த்துக் கொண்டிருந்த தந்தைக்கு கோபம் வந்தது "கையில் சிறிதும் பணமில்லாத இந்த நேரத்தில் ஏன் இப்படி வெட்டிச் செலவு செய்கிறாய்" என மகளைக் கடிந்தார்.

மறுநாள் கிறுஸ்துமஸ்.
குட்டிப் பெண் அந்த அலங்கரிக்கப்பட்ட பெட்டியைத் தந்தையிடம் கொடுத்தாள்.

"அப்பா என்னுடைய சிறிய பரிசு உங்களுக்காக"

நெகிழ்ந்து போன தந்தை முந்தைய நாள் மகளைக் கடிந்து கொண்டதற்காக வருந்தினார்.
ஆவலுடன் தங்கச் சரிகை சுற்றிய பெட்டியைத் திறந்து பார்த்தார்.உள்ளே ஏதும் இல்லை.தந்தைக்கு மீண்டும் கோபம் வந்தது.

"முட்டாள் பெண்ணே யாருக்கேனும் பரிசளித்தால் ஏதேனும் பொருளைக் கொடுக்க வேண்டும் என்பது கூடத் தெரியாதா உனக்கு?"

அழுது கொண்டே மகள் சொன்னாள்"அப்பா இதில் என்னுடைய அன்பான முத்தங்களை நிரப்பி வைத்திருந்தேன்.என்னால் அதை மட்டுமே உங்களுக்குத் தர முடிந்தது"

மனம் நொறுங்கிப் போன தந்தை மகளைத் தன்னோடு அணைத்துக் கொண்டார்.

"என் செல்வமே இதை விடச் சிறந்த பரிசை யாராலும் தர முடியாது.உன்னைக் கோபப்பட்டு பேசியதற்கு என்னை மன்னித்து விடம்மா"என்றார்.

அதன் பிறகு அந்தப் பெட்டியை எப்போதும் தன்னோடே வைத்துக் கொண்டார்.
மகள் பெரியவளாகி மணம் முடித்துச் சென்று விட்ட பிறகும் தனக்கு மனக்கவலையோ பிரச்சனைகளோ வரும்போதெல்லாம் அவர் அந்தப் பெட்டியைத் திறந்து பார்த்து தன் மகளின் அன்பையும் அன்பு முத்தங்களையும் உணர்வதாக நினைத்துக் கொள்வார்.அவர் வேதனைகளும் தீர்ந்து விடும்.
netoops blog